1,100 பவுணிற்கு மேற்பட்ட தங்க நகைகளை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் இரு பெண்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
யாழ். மடத்தடி வீதி மற்றும் குருநகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் அதிகூடிய வட்டி வழங்குவதாக கூறி பல்வேறு பெண்களிடம் தாலி மற்றும் சங்கிலி போன்ற பெறுமதி மிக்க நகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக இவ்வாறு நகைகளை பெற்றுக்கொண்ட இரு பெண்களும் நகைகளை மீள தருவதாக கூறி ஏமாற்றி அவர்கள் அதி நவீன வசதியுடன் கூடிய வீடு கட்டியுள்ளனர். தமது கணவன் மார்களுக்கு தெரியாமல் நகைகளை கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். சிறுகுற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் குறித்த இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையின் பிரகாரம் குறித்த பெண்கள் மோசடி செய்த தங்க நகைகளை தவணை முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள செலுத்துவதாக பொலிஸாருக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.
எனினும் குறித்த இரு பெண்களும் பாதிக்கப்பட்டவர்களிக்கு நகைகளை மீள கொடுப்பதற்கு தயக்கம் காட்டுவதுடன் மோசடி செய்த இரு பெண்களும் பல்வேறு தரப்பட்ட பொலிஸாருடன் தொடர்பு கொண்டு, நகைகைள மீள கையளிப்பதற்கான காலத்தினை பின்தள்ளி வருகின்றனர்.
இதனால், கணவன்மார்களுக்கு தெரியாமல் நகைகளை கொடுத்து ஏமாற்றமடைந்த பெண்கள் தமது குடும்பங்களுக்குள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை தாம் சந்திப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்கள். இவ்வாறு தாம் இழந்த நகைகளை காலம் தாழ்த்தாது பெற்றுத் தருமாறும் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.