2013ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவரினால் வடக்கு மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் ரூபா வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயினால் தற்போது வடக்கு மாகாணத்துக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அப்போது ஆளுநராக இருந்தவர் சட்டவிரோதமாக ஆளுநர் நிதியத்திற்குத் திருப்பியிருந்தார்.
மாகாணசபையிடமிருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட 110 மில்லியன் ரூபாவையும் திருப்பி மாகாண சபைக்கே வழங்கப்படவேண்டுமென வடக்கு மாகாணசபை பேரவைத் தலைவர் பொதுக்கணக்கு குழுவின் ஊடாக விடுக்கப்பட்ட அறிக்கையினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதற்கிணங்க, மோசடியாகப் பெறப்பட்ட 110 மில்லியன் ரூபாவையும், வேறொரு வழியில் பெறப்பட்ட வடக்கு மாகாண சபையின் நிதியான 20 மில்லியனையும் சேர்த்து தற்போது 130 மில்லியன் ரூபாவை வடக்கு ஆளுநர் வடக்கு மாகாணசபைக்கு மீண்டும் வழங்கியுள்ளார்.
குறித்த நிதியானது, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கடுமையான நோயாளிகளுக்கு வடக்குமாகாண சபையின் அனுமதியுடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.