தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா டி ஜயரத்ன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், வெளிநாடு செல்வதற்கான இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்தார்.
அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்து கையெழுத்து இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களது உடல் எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில எலும்புகளும் திருகோணமலை பகுதியிலுள்ள கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 6 மாதங்களாக தொடர்ந்தும் இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுவந்த நிலையில், அவர்கள் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.