104 குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிப்பு

பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இதில், விடுவிக்கப்பட்ட அன்டனிபுரத்தில் 40 குடும்பங்களுக்கு நிரந்த காணிகள் உள்ளன. அக்குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் தற்போது திருமணம் செய்து தனித் தனிக் குடும்பங்களாக உள்ளனர்.

இதனடிப்படையில் இக்குடும்பங்களுக்கு சொந்தக்காணி பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்கரைக்கு தெற்கு புறமாக உள்ள அரச காணி கனரக இயந்திரங்களின் உதவியுடன் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில், குடும்பத்துக்கு தலா 2 பரப்பு காணிகள் தற்போது பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு, நிறைவடைந்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போது 104 குடும்பங்கள் சொந்தக்காணிக்கு உரித்துடையவர்களாக மாறியுள்ளனர்.

இவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணி கிடைக்கப் பெறாத மேலும் 20 குடும்பங்களுக்கு அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றத.

காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதை அடுத்து, மீளக்குடியமர பலாலி வடக்கில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்குவதற்குரிய இரண்டாம் கட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியின் ஊடாக 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிரந்தர வீடு வழங்கப்படவுள்ளன. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அத்திபாரம் வெட்டி தமது வீட்டுத்திட்ட பணிகளை பயனாளிகள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

பலாலி வடக்கு விடுவிக்கப்பட்ட 5 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இப்பகுதியின் அபிவிருத்தி பணிகள் தற்போது முழுவீச்சில் இடம்பெற்று வருவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Posts