2011ம் ஆண்டு யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தால், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஏழு பேரின் விளக்கமறியலை நீடிக்க யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவர் மன்றில் முன்னிலையாக நிலையில் குறித்த நபருக்கு எதிராக மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், அதனை குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரூடாக நடமுறைப்படுத்தவும் மேல் நீதிமன்று பணித்துள்ளது.
இவ் வழக்கானது நேற்றயதினம் யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரான விசாரணையின் போது, 2011ம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேலும் ஏழு பேர் இணைந்து சித்திரவதை செய்து படுகொலை செய்து கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசியதாக மல்லாகம் நீதிமன்றில் சந்தேகநபர்களால் வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரனை செய்ய மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்பிரகாரம் இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவானது விசாரணை செய்து, அது தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு சமர்பித்திருந்தது.
இதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பாக இனங்காணப்பட்ட எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஜவருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கொலை வழக்கும், யாழ்.மேல் நீதிமன்றில் எட்டு பேருக்கு எதிராக சித்திரவதை வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த இவ்வழக்கில் ஏழாவது சந்தேநபருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், அதனை குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரூடாக நிறைவேற்றவும், ஏனைய ஏழு பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.