இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போவின் புதிய முகாமையாளராக, மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட், கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
மன்னார் டிப்போ அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை ( 15) காலை 8 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் இலங்கை புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள தையடுத்து, குறித்த நியமனத்தை குழப்பியடிக்கும் வகையில் அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஏற்கெனவே இருந்த முகாமையாளரை மீண்டும் நியமிப்பதற்கு குறித்த அமைச்சர் துரித முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது இவ்வாறு இருக்கும் நிலையில், மன்னார் புதிய முகாமையாளரின் நியமிக்கப்பட்டுள்ள நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சேவையின் வடமாகாண மனிதவள முகாமைத்துவப்பகுதியூடாக நேற்று வெள்ளிக்கிழமை, மன்னார் டிப்போவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், “தரம்v பதவிக்கு உயர்த்தப்பட்டு, மன்னார் டிப்போ முகாமையாளர் பதவிக்கு நியமித்து உங்களுக்கு 07-03-2017 அன்று வழங்கப்பட்ட கடிதத்தை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்கின்றேன்.
அதன் பிரகாரம், நீங்கள் இதற்கு முன்னர் இருந்த பதவியிலும்,தரத்திலும் மீண்டும் இருப்பதுடன், மேற்படி பதவிக்கு சொந்தமான கடமை நடவடிக்கைகளை முறைப்படி மன்னார் டிப்போவில் முன்பிருந்த முகாமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.