Ad Widget

 விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன. காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிவழங்கும் நிகழ்வில் வைத்து குறித்த காணிகளை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார்.

எனினும் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை. எனினும், இன்றையதினம் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை தமது கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட மக்கள், விடுவிக்கப்பட்ட ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கட்டுவன் ஜே-242, குரும்பசிட்டி ஜே-238, ஆகிய பகுதிகளில் 126.3 ஏக்கர் காணி, வறுத்தலைவிளான் ஜே-241 பகுதியில் 12 ஏக்கர் காணி, வடக்கு புகையிரதசேவையின் இறுதிப்பகுதியான காங்கேசன்துறையில் 63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts