ரணில்-மஹிந்த சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இருந்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்துக்குப் பொறுப்பாக ஜனாதிபதியும் பொலிஸுக்கு பொறுப்பாக பிரதமரும் இருக்கின்றனர். இந்நிலையில், பாதுகாப்புச் சபை எடுத்த முடிவுக்கு அமையவே, மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

அவருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை அகற்றிக்கொள்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கே, பாதுகாப்பு கவுன்சில் அங்கிகாரமளித்துள்ளதாக அறியமுடிகின்றது.

Related Posts