பீ.எம்.ஐ.சி.எச்.இல் களஞ்சியப்பட்டிருந்த ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ‘ரக்ன லங்கா’ எனப்படும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி காணப்படுவதால், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

armoury-gun

மேற்படி களஞ்சியசாலையிலுள்ள 23 கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் வாழைத்தோட்ட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அக்களஞ்சியசாலையை சோதனையிடுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மேற்படி களஞ்சியசாலையை சோதனையிட்ட பொலிஸார், அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகவும் அது தொடர்பில் தங்களுக்கு சரியான தகவல்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்படியும் மேற்படி நிறுவனத்திடம் கோரினர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன,

ரி-56 ரக துப்பாக்கிகள் 2300, 84 எஸ் ரக துப்பாக்கிகள் 670, எல்.எம்.ஜீ.க்கள் 385, எம்.பி.எம்.ஜீ.க்கள் 10, எஸ்.எல்.ஆர்.கள் 11, கைத்துப்பாக்கிகள் 08, 12 ரக ரிபிட்டர்கள் 79, மற்றும் ஷொட் கன்கள் 10 என 3,473 துப்பாக்கிகளை குறித்த களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தவே பாதுகாப்பு அமைச்சு, மேற்படி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது’ என்றார்.

இருப்பினும், நேற்றைய தினம் அக்களஞ்சியசாலையை பொலிஸார் சோதனையிட்ட போது, ரி-56 ரக துப்பாக்கிகள் 44, 84 எஸ் ரக துப்பாக்கிகள் 35, எல்.எம்.ஜீ.க்கள் 32, எம்.பி.எம்.ஜீ.க்கள் 01, எஸ்.எல்.ஆர்.கள் 00, கைத்துப்பாக்கிகள் 00, 12 ரக ரிபிட்டர்கள் 29, மற்றும் ஷொட் கன்கள் 10 என 151 துப்பாக்கிகளே காணப்பட்டன.

இதன்பிரகாரம், 3,322 துப்பாக்கிகள் இங்கு குறைவாக இருந்தன. இருப்பினும், பல்வேறு பாதுகாப்பு சேவைகளுக்காக பல துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று மேற்படி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையிலேயே, யார், யாருக்கு எத்தனை துப்பாக்கிகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்ற விடயங்கள் அடங்கிய அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பிக்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு உத்தரவிட்டதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Related Posts