ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்துறை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலருக்கு அரச உத்தியோகத்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இவ் நேரமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான பாதை சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கற்பித்தல் நேரம் 7:30க்கு மாற்றப்பட்டிருந்ததை அடுத்து கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதியிலிருந்து படகு பாதையில் நேரமாற்றத்தினை, வீதி அபிவிருத்த அதிகார சபை மாற்றி வழங்கியிருந்தது.
இதனால் சிரமங்களை எதிர்கொண்ட அரச உத்தியோகத்தர்கள், காலை 7:30 மணிக்கு ஒரு சேவையினைப் பெற்றுத்தருமாறு, ஊர்காவற்துறை பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தனர்.
இதன் அடிப்படையில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளருடன் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மேற்கொண்ட கலந்துரையாடலினை அடுத்து திங்கட்கிழமையிலிருந்து (09) இருந்து 7:30 மணிக்கு ஒரு படகு பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.