நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் வருகிற 27ஆம் திகதிக்குள் தமிழக அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு கீழ் கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர், இந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசாங்கம் ஒரு கொள்கை முடிவு எடுத்தது.

இதன்படி 1994ஆம் ஆண்டு அரசாணையும் பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி, முன்கூட்டியே விடுதலை பெற நான் தகுதியானவள். கற்பழிப்பு, கொலை போன்ற கொடூர குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் பலர் இந்த அரசாணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, என்னையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்கு தமிழக அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் உத்தரவிட்டார்.

Related Posts