சிவாஜிலிங்கத்தின் பிரேரணை அடுத்த அமர்வில்

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை பெப்ரவரி 10 ஆம் திகதி சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

sivajilingam_tna_mp

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது, ‘வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றைக் கோருதல்’ என்ற தனது பிரேரணை எப்போது எடுத்துக்கொள்ளப்படும் என சிவாஜிலிங்கம் சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர் அடுத்த அமர்வில் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் முன்வைத்த இந்தப் பிரேரணையில் இனஅழிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்த காரணத்தால், அதனை சட்ட ரீதியாக நிரூபித்த பின்னரே சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இரண்டு, மூன்று அமர்வுகள் ஆகியும் தனது பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாததையடுத்து, ஆத்திரம் கொண்ட சிவாஜிலிங்கம் டிசெம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் செங்கோலை தூக்கி எறிந்தார்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இந்தப் பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அது ஜனாதிபதி தேர்தல் பிரசார கருவியாக மாறிவிடும் என்பதால் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts