வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடைய ஒப்புதல் வாக்குமூலமடங்கிய போலிப்பத்;திரத்தில், என்னை கட்டாயப்படுத்தி கைச்சாத்திட வைத்தார்கள் என்று ‘கொண்டையா’ என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த தெரிவித்துள்ளார்.
அவரை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (23) அனுமதியளித்ததையடுத்து, முதன்முறையாக ஊடகங்களுக்கு முன்னால் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர், ஒரு நீண்ட வாக்குமூலத்தில் கையொப்பமிட தான் கட்டாயப்படுத்தப்படதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘நான் கல்வி கற்காதவன். நான்தான் சிறுமியை கொலை செய்தேன் என்று நான் வாக்குமூலமளிக்கவில்லை. அந்த வாக்குமூல அறிக்கையில் என்ன எழுதியிருந்தது என்பதும் எனக்கு தெரியாது. நான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமையினாலேயே அந்த பத்திரத்தில் கையொப்பமிட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
‘இந்த கொலையை புரிவதற்கு எனது அண்ணனுக்கு நான் உதவி புரியவில்லை. நான் சிறுமி சேயாவை கண்டதும் கிடையாது. சிறுமியின் குடும்பத்துடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சிறுமி சேயாவை கொலை செய்த குற்றத்துக்காகத்தான் நான் கைது செய்யப்பட்டேன் என்ற விடயமே எனக்குத் தெரியாது.
எனது நண்பனுடைய சில குற்றங்களுக்காக, என்மீது வழக்குகள் தொடர்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. இந்த குற்றங்களுக்காக நான் கைது செய்யப்படுவேன் என்ற பயத்திலேயே, நான் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்தேன்’ என்று துனேஷ் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட ஒரு போலிக்கதையையே அனைவரும் நம்பியதாகவும் தான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றம் விளக்கிக்கொள்ளவேண்டும் என்றும் பொலிஸாரை நினைத்து தான் பயந்து இருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.
மேலும் சிறுமி சோயாவின் கொலை தொடர்பில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு ‘கொண்டையா’ என்ற பெயர் இருக்கவில்லை என்றும் ஊடகங்கள் தன்னை ‘கொண்டையா’ என்று முத்திரை குத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஒரு சாக்கில் எனது தலையை மூடி, சீமெந்து சுவரில் முட்டி, தடியால் என்னை குற்றப்புலனாய்வு பிரிவினர் கடுமையாக தாக்கினார்கள். இந்த கொலையுடன் நான் சம்பந்தப்பட்டிப்பதாக தகவல்கள் கசிந்ததால், என்னுடைய காதலியும் என்னை பிரிந்து சென்று விட்டாள்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஊடகங்கள் துனேஷினுடைய பெயரை முற்றாக அழித்துவிட்டதாக உரிமைகளுக்காக சட்டதரணிகள் சங்கத்தின் சட்டதரணி உபுல் பிரேமரத்ண தெரிவித்துள்ளார்.
‘கொண்டையா யார், அந்த பெயரை யார் வைத்தது. ஊடகங்கள் மற்றும் மற்றைய அனைவரும் துனேஷினுடைய இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறையை சிந்தித்து பார்க்கவேண்டும். இந்த விசாரணையை விரைவில் முடித்து விடும் நோக்கிலேயே, குற்றப்புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
மரபணு பரிசோதனை தொழில்நுட்பம் எமது நாட்டில் இருந்திருக்காவிடில், துனேஷ் இந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருப்பார். இவ்வாறு ஒரு பொறுப்பற்ற சட்டம் நம் நாட்டில் இருக்கையில், மரணதண்டனை நம் நாட்டில் அமுலில் உள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது. அனைத்து அப்பாவிகளும் அநியாயமாக கொலை செய்யப்படுவர்’ என்று அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
எனவே, இந்த விடயத்தை தீவிரமாக விசாரணை செய்யவேண்டும் என்றும் மரணதண்டனையை நாட்டில் அமுல் படுத்தவேண்டும் என்பது தொடர்பான கருத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.