இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த மீனவர்கள் ஒரு மாதம் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பது என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 300 விசைப்படகுகளும், ஆயிரம் பைபர் படகுகளும் உள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
மீனவர்கள், இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் மட்டுமே மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் இந்திய எல்லையை தாண்டி இலங்கைக்குள் சென்று மீன்பிடிக்க செல்லக்கூடாது.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாராவது இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன்பிடித்தது தெரிய வந்தால் அந்த விசைப்படகு உரிமையாளருக்கு 50 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த மீனவர்கள் ஒரு மாதம் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்தியில் கூறப்பட்டுள்ளது.