மாகாண மக்களுக்கும், மாகாண சபைக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிக்கின்றேன். நான் வடமாகாணசபை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இறுவட்டில் உள்ள ஒலிப்பதிவை கேட்டால் உண்மை விளங்கும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆளுநர், ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை(சீடி) முதலமைச்சரிடம் கையளித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வடமாகாண சபை தொடர்பான கடுமையான விமர்சனங்களை ரெஜினோல்ட் கூரே முன்வைத்ததாக அண்மையில் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்திய ரெலோ அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுநரை உடனடியாக மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இதேவேளை நேற்றைய தினம் ஆளுநரிடமிருந்து இறுவட்டைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர், ‘ஆளுநர் ஒரு சிறந்த மனிதர். புரிந்துணர்வு இல்லாமையினாலேயே இந்த பிரச்சினை வந்துள்ளது என எனது அலுவலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கூறியுள்ளேன்’ என்றார்