ஹெரோய்ன் கொள்வனவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன், காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி, தன்கெதர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது சிறுநீரகத்தை விற்பனைச் செய்த பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும் அங்கு 120,000 ரூபாய்க்கு ஹெரோய்னை கொள்வனவு செய்து விட்டு, மிகுதியிருந்த பணம் செலவழிந்த பின்னர், காலிக்குத் திரும்பியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
36 வயதுடைய திருமணமாகாத குறித்த நபர், நாளாந்த கூலித் தொழிலாளியாக கடமையாற்றுபவர் என்றும் ஹெரோய்ன் பாவிப்பதற்காக தனது அனைத்து வருமானத்தையும் இழக்கக்கூடியவர் என்றும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் தனது வீட்டுக்கும் அருகிலுள்ளவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை, சந்தேகநபருக்கு தெரியவந்துள்ளது. இதற்கு உதவுவதாகத் தெரிவித்த சந்தேகநபர், தனது சிறுநீரகத்தை விலைக்கு கொடுத்து, 500,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி, இரண்டு கிழமைகளிலேயே உயிரிழந்து விட்டார் என்று தெரியவருகின்றது.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.