ஹிப் ஹாப் ஆதியை வெளுத்து வாங்கிய சமுத்திர கனி

ஜல்லிக்கட்டு போரட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளதற்கு இயக்குநர் சமுத்திரக் கனி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிவிட்டதால்,இளைஞர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என இன்று இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி பேட்டி அளித்திருந்தார்.ஹிப் ஹாப் ஆதியின் இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் சமுத்திரக் கனி,ஹிப் ஹாப் ஆதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.”சினிமாக்காரர்கள் யாரும் போராட்டத்திற்கு வராதீர்கள் என இளைஞர்கள் சொன்னார்கள்.ஹிப் ஹாப் ஆதி,ராகவா லாரன்ஸ்,நான் உள்ளிட்ட சிலரை மட்டும் அவர்கள் போராட்டத்தில் பங்குகொள்ள அனுமதித்தார்கள்.இதற்கு காரணம் அவர்கள் எங்களை சினிமாக்காரர்களாக பார்க்கவில்லை.சகோதரர்களாக பார்த்தார்கள்.

ஆனால் ஹிப் ஹாப் ஆதி இன்று தெரிவித்துள்ள கருத்து போரட்டக்காரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.யாரோ சிலர் தவறு செய்தால்,நாம் ஏன் ஒட்டுமொத்த போராட்டத்தையும் குறை சொல்ல வேண்டும்.சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள 10 லட்சம் பேரும் அவ்வளவு கண்ணியமாக இந்த போராட்டத்தை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த போராட்டத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் ஹிப் ஹாப் ஆதி அமைதியாக இருந்துவிட வேண்டியதுதானே? ஏன் அதனை பேசி பூதாகாரமாக ஆக்குகின்றார்.ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக ஹிப் ஹாப் ஆதி செய்துள்ள பணிகளுக்காக அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.அதற்காக அவருக்கு உடன்பாடு இல்லை என்பதற்காக ஒட்டு மொத்த போராட்டத்தையும் நிறுத்த குரல் கொடுக்கக் கூடாது.”என சமுத்திரக் கனி தெரிவித்துள்ளார்.

Related Posts