எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.
நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் எங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள் என நம்பியிருந்தவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவர்களை நம்பி ஏமாந்துவிட்டோம் எனவேதான் அவர்களை இனியும் நம்புவதை விடுத்து நாங்களே எங்களுக்கான தீர்வை போராட்டங்களின் மூலம் பெறுவதென்று முடிவெடுத்து இருக்கின்றோம்.
முடிந்தால் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் குறித்து எமக்கான நல்லதொரு தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள், தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்றுபட்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என லீலாதேவி மேலும் தெரிவித்துள்ளார்.