நடிகை ஹன்சிகா அழகானவர் மட்டுமல்ல, அன்பானவர் என்பதும் அவருடைய சமூகச் சேவைகளைப் பார்த்தாலே புரியும். ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு கல்வி உதவியையும், அவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பே இது போன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை ஆரம்பித்த ஹன்சிகா அதை இன்னும் அதிகமாகவே செய்து வருகிறார். மனித நேயத்துடன் அவர் செய்து வரும் பல விஷயங்கள் அவரை ஒரு திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி ரசிகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் அவர் ஒரு அற்புதமான கோரிக்கை ஒன்றை மக்களிடம் வைத்துள்ளார். ஒவ்வொருவர் வீட்டிலும் பிறந்த நாள், திருமணம் இப்படி ஏதாவது ஒரு விசேஷம் நடைபெறும் போதாவது ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரவர் வசதிக்கேற்ப அவர்கள் செய்யும் செலவில் ஒரு சிறு தொகையை அப்படிப்பட்டவர்களுக்காக ஒதுக்கி ஒரு நாளாவது அவர்களுக்கு உணவளித்தால் நன்றாக இருக்கும் என்கிறார். அவருடைய பிறந்தநாள், மற்ற விசேஷ நாட்களில் ஏழைகள் பலருக்கும் தான் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மற்றவர்களும் அப்படி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் சமூக அக்கறையுடன் ஹன்சிகா வைக்கும் கோரிக்கையை பலரும் நிறைவேற்றினால் நன்றாகவே இருக்கும்.
ஹன்சிகா தற்போது பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது இருக்கும் முன்னணி ஹீரோயின்களில் ஹன்சிகாவின் இப்படிப்பட்ட சமூக அக்கறை மற்றவர்களையும் செய்ய வைக்கத் தூண்டினால் அது அவருக்குக் கிடைக்கும் மற்றொரு வெற்றியாக இருக்கும்.