ஹக்கீமும், சம்பந்தனும் கேட்பதை கொடுக்கலாமா? மக்கள் தீர்மானிக்கட்டும் – ஜனாதிபதி

யுத்தம், ஆயுதம்தான் நல்ல வியாபாரம். அந்த வியாபாரத்தை நாம் நிறுத்திவிட்டோம். 30 வருட யுத்த்ததை 4 வருடங்களில் முடித்து மரண பயத்தை இல்லாதொழித்தோம். நாட்டை ஒன்றிணைத்தோம். சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமும் கேட்பதைக் கொடுக்க முடியுமா? மக்களாகிய நீங்களே தீர்மானியுங்கள். – இவ்வாறு தெரிவித்தார் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ.

vaddu-hindu-students-mahintha

மஹிந்த ராஜபக்‌ஷ என்றதும் ஐ.தே.கவினரின் கால்கள் நடுங்குகின்றன. எவரையாவது பலிகொடுத்து தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் தேவை என்றும் ஜனாதிபதி மஹிந்த கூறியுள்ளார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடவில்லை. ஐ.தே.கவுக்கு இன்று தலைமைத்துவம் இல்லை. எவரையாவது களமிறக்கி, பலிகொடுத்துத் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் தேவை. வேறேதுவும் தேவையில்லை.

அவரைப்பற்றி எனக்கு தெரியும்தானே. தேநீர் ஒன்று கொடுத்தால் எல்லாம் சரி. நான் இப்போது எவருக்கும் அப்பம் சாப்பிட கொடுப்பதில்லை. தேநீர்தான் கொடுக்கின்றேன். இந்த நாட்களில் என்னிடம் வந்து தேநீர் குடிக்க ஐக்கிய தேசியக் கட்சியினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் பயந்துவிட்டனர்.

ஐ.தே.கவினர் மஹிந்த ராஜபக்‌ஷ என்றால் அஞ்சுகின்றனர். கால்கள் நடுங்குகின்றன. அதனால் வேறு எவரையாவது போட அவர்கள் முயற்சித்தனர். தேடிக்கொண்டிருந்தனர். எமது மடையர் அவர்களுக்குக் கிடைத்தார். அன்றிரவு அப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்து, சாப்பிட்ட அப்பம் சமிபாடடைய முன்னர் காலையில் சென்றார். இவ்வாறு காட்டிக் கொடுப்பவர்களுக்கா நாம் நாட்டைக் கையளிப்பது? இப்போது எமக்கு விரல் நீட்டுகின்றனர். எமக்கு விரல் நீட்ட முடியாது. 10 வருடங்கள் மிகவும் பயங்கரமான சர்வாதிகாரி ஒருவர் நாட்டை ஆட்சி செய்தார் என்று இவர்கள் கூறுகின்றனர்.

யுத்தம், ஆயுதம்தான் நல்ல வியாபாரம். அந்த வியாபாரத்தை நாம் நிறுத்திவிட்டோம். 30 வருட யுத்த்ததை 4 வருடங்களில் முடித்து மரண பயத்தை இல்லாதொழித்தோம். நாட்டை ஒன்றிணைத்தோம். ஒரே நாடாக மாற்றினோம். இதை மீண்டும் இல்லாதொழிக்க, சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் தேவையானவற்றுக்கு இடமளிக்க வேண்டுமா இல்லையா என்று நீங்களே தீர்மானிக்கவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகாவுக்கு தேவையான ஒரு தரப்பினரை உருவாக்கி, அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை மட்டுமே உள்ளது. 8 ஆம் திகதி வெற்றிலையை வெற்றிபெறச் செய்து, நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க தயாராகுங்கள்” – என்று கூறினார் ஜனாதிபதி மஹிந்த.

Related Posts