ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஒற்றுமை நிலவவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பது தொடாபாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருட காலமாக மிகுந்த அர்பணிப்புடன் கட்சி தலைமை உட்பட பல பதவிகளை வகித்தவன் என்ற வகையிலும், கட்சியை வளர்த்தெடுத்தவன் என்ற வகையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிளவுபடுத்தத் தான் விரும்பவில்லை எனவும், அதன் காரணமாக தலைமை பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க தான் தீர்மானித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் கடமை.
இதன் காரணமாக புதிய தலைமை, நிறைவேற்று குழு மற்றும் அதிகாரிகள் கட்சியின் நலனை மாத்திரமல்ல, நாட்டின் நலனையும் உறுதிப்படுத்தவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்த 5.7 மில்லியன் மக்களின் அபிலாஷைகளை நான் வெளிப்படுத்துகிறேன்.- என அவர் தெரிவித்துள்ளார்.