ஸ்ரீலங்கா தூதுவரை தாக்கியது ஈழத்தமிழர்கள் அல்ல; பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அரசாங்கம் தயாரில்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் வைத்து உறுதியளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் போர் குற்ற விசாரணைக்காக நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைப்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போர் குற்ற நீதிமன்றில் நிறுத்தி விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்திய மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் மலேசியாவிற்கான தூதுவர் இப்ராஹீம் அன்சார் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும், மலேசியா சென்ற மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் குறித்தும் கூட்டு எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் விளக்கமளித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளதாகவும் இதனால் விசாரணை முடிவுகள் வரும் வரை காத்திருப்போம் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

அத்துடன் மலேசியா ஸ்ரீலங்காவின் மிக நெருங்கிய நட்டு நாடு என்றும் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர், இதனால் மலேசியாவுடன் முரண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு விடையத்தில் அரசாங்கம் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் ஸ்ரீலங்கா தூதுவர் மீதான தாக்குதல்களுடன் ஈழத் தமிழர்கள் எந்தவித்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளித்தமிழர்களே போராட்டங்களில் ஈடுபட்டதுடன் தூதுவரையும் தாக்கியதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர் குற்ற நீதிமன்றில் நிறுத்தி விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்திய மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கம் அதுவல்ல என்பதை விரைவில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மலேசியாவிற்கு மாத்திரமன்றி இந்தியாவின் தமிழகத்திற்கும் பிரதிநிதிகளை அனுப்பி ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts