ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. அண்ணாதுரை 1552 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களில் டிராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் 1167 வாக்குகளை பெற்றுள்ளார்.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் நோட்டாவுக்கு 1919 வாக்குகள் விழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இதில் தி.மு.கவைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன.
அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் கோஷங்களை எழுப்பியும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.கவின் தலைமையத்திலும் ஜெயலலிதாவின் இல்லம் முன்பாகவும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
ஜெயலலிதா நன்றி
இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றதையடுத்து, அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “கேடு மதி கொண்ட அரசியல் எதிரிகள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்ற ஆற்றல் அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழுமையாக உள்ளது என்பதையே ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவும், கழக வேட்பாளரின் வாக்கு வித்தியாசமும் உலகுக்கு உணர்த்துகின்றன” என்று கூறியுள்ளார்.
எதிர்பார்த்த முடிவு: எதிர்க் கட்சிகள்
இந்த இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றிபெற்றிருக்கும் நிலையில், எதிர்க் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றன.
இடைத்தேர்தல் முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்… அவர்களே வென்றார்கள்” என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ஜனநாயகத்தின்படியோ, சட்டத்தின்படியோ உண்மையான தேர்தலாக இருக்காது என்கிற காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதிலிருந்து விலகியது. இன்றைக்கு வருகிற வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால் எங்கள் நிலை நியாயமானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
“கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த வாக்காளார்கள் 2,20,962. தற்போது 2015 இல் மொத்த வாக்காளார்கள் 2,70,281. ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்காளர்கள் திடீரென்று எப்படி முளைத்தார்கள்?” என்றும் இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார்
இந்த இடைத் தேர்தலில் பணநாயகம் வெற்றிபெற்றிருப்பதாக, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இரு மடங்கு வாக்குவித்தியாசத்தில் வெற்றி
2011 ஜெயலலிதா இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றபோது கிடைத்த வாக்கு வித்தியாசத்தைப் போல இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் தற்போது அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
2011ஆம் ஆண்டில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, தன்னை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை விட 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா மொத்தம் 1,05,328 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்த் மொத்தம் 63,480 வாக்குகள் பெற்றார்.
ஆனால், தற்போது, 96 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வளர்மதி வெற்றிபெற்றிருக்கிறார். வெற்றி வாக்கு வித்தியாசத்தில் 10வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் வளர்மதி.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால் தனது பதவியை இழந்தார்.