ஸ்டாலின் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக. பொருளாளர் முக. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, பெரம்பூரில் உள்ள தென்னக ரயில்வே கல்லூரியில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வரை திமுகவினர் பேரணியாகச் சென்றனர்.

பெரம்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர், பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தால் ரயில் நிலையம் அமைந்துள்ள வீதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில், மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts