டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில், அனகோண்டா வகை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, ‘ஐயம் ஏ செலப்ரட்டி.. கெட் மீ அவுட் ஆப் ஹியர்’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, அனகோண்டா பாம்பு, எலிபிடி பாம்பு உள்ளிட்ட பாம்புகள் குவிக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் குனிந்து, அந்த பாம்புகளை வார்னே முத்தமிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
வார்னே அவ்வாறு முத்தமிட செல்லும் முன்பாக அவரது முகத்தில், எலி வாடை வரும் ஸ்ப்ரே அடிக்கப்பட்டது. வார்னே அருகே சென்றதும், எலிதான் வருகிறது என நினைத்து பாம்புகள் கடிக்க பாயும் என்பதால் அதுகுறித்து அவருக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.
துணிச்சலோடு, பாம்புகளை முத்தமிட வார்னே குனிந்தபோது, எலிதான் என நினைத்து குட்டி அனகோண்டா வகை பாம்பு வார்னே கன்னத்தை பதம் பார்த்துவிட்டது. அந்த வகை பாம்பு கடிக்கும்போது, 100 ஊசிகளை ஒருங்கே குத்துவது போல ஒரு வலி உருவாகும். எனவே வார்னே அலறி துடித்தார்.
உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. இந்த வகை பாம்புகளில் விஷம் இல்லை என்பதால் வார்னே உயிருக்கு ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இன்பெக்ஷன் ஆகிவிடாமல் இருக்க அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய வார்னேயின் ஸ்பின், இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரிடம் எடுபட்டதில்லை. வார்னேவை பிரித்து மேய்வது சச்சின் வாடிக்கை. இதைத்தான், சச்சினிடம் அடி, அனகோண்டாவிடம் கடி என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேலி செய்துவருகிறார்கள்.