பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன
நேற்று (புதன்கிழமை) சுமார் 100 பேரும் இன்று 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கன் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்களே திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர். இவர்களை பரிசோதித்த பின்னர் ஒருவகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கொட்டகலை வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இன்று காலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரியும், சுகாதார பரிசோதகரும் அங்கு சென்றனர்.
இதன்போது மேலும் 75 மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட, அவர்கள் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே குறித்த மாணவர்களை கொட்டகலை, கிளங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் நேற்று அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள், பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.