முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் அதில் சிலர் இருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள, பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர்களது நோக்கம் என்ன என்பதை விரைவில் விஷேட விசாணைகளை மேற்கொண்டு வௌியிடுமாறும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் விரைவில் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடக மத்திய நிலையத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.