Ad Widget

வெள்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற வழக்கினை நிறைவு செய்து வெளியில் வந்த மூன்று இளைஞர்களை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெள்ளை வானில் ஏற்றிச்சென்றுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்த வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றில் நடைபெற்றது.

குறித்த வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்த 74 இளைஞர்கள், விசாரணை நிறைவடைந்து வெளியில் வந்தபோது வெள்ளைவானில் வந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் எழுமாற்றாக மூன்று இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் எவ்வித அனுமதியுமின்றி இடம்பெற்ற இச்சம்பவத்தால் பீதியில் ஏனைய இளைஞர்கள் ஓடியுள்ள நிலையில் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, இளைஞர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேதீஸ்வரன், அஜந்தன், அகிலன் என்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் வினவியபோது மேலதிக விசாரணைக்காகவே அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இளைஞர்களை இவ்வாறு மீண்டும் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளமை மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ் நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாத ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதிக்கு யாழ்.நீதவான் எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார்.

Related Posts