வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற நிலையில், அங்கு உயிரிழந்த மஸ்கெலிய யுவதி ஒருவர், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இனங்காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹட்டன் – மஸ்கெலியா – ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தில் இருந்து 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பழனியாண்டி கற்பகவள்ளி என்ற பெண் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவரை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று தொழிலுக்காக அனுப்பி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த பெண் கடந்த மாதம் 31ம் திகதி சவுதி அரேபிய நாட்டின் றியாத் பிரதேசத்தின் ஒலேய்யா பபா என்ற முகாமில் இருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில் உயிரிழந்தவர் தன்னுடைய சகோதரி என்பதை, வலையத்தளங்கள் ஊடாக பார்வையிட்ட, கற்பகவள்ளியின் சகோதரர் பழணியாண்டி பரமசிவம் அடையாளம் கண்டுள்ளார்.
குறித்த பெண் திருமணம் முடித்தவர், இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர், இவரின் கணவர் நீண்ட காலமாக இவருடன் இருக்கவில்லை என்பதை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த எட்டு நாட்களுக்கு மேலாகியும் உயிரிழந்த பெண் தொடர்பில் தமக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை, என அவரது குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ள அதேவேளை இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் கோரியுள்ளனர்.