வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு

முன்னாள் போராளிகள் மனம் தளராது மன தைரியத்துடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சைக்கு உட்படுத்தபட்டிருக்கலாம், ஊசி போடப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது குறித்த ஊசி விச ஊசியாக இருக்கலாமா? என சந்தேகம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அவர்களை நம்பி அவர்களின் குடும்பங்கள் காணப்படுகின்றன, அவர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்பும் இல்லை, கடின உழைப்பின் மத்தியில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு. இவ்வாறான செய்திகள் அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அன்று போராளிகளாக இருந்தவர்கள் பின்னர் சிறைக்கைதிகளாக மாற்றப்பட்டனர், அவர்கள் உயிருடன் மீண்டு வருவோமா என்ற அச்சத்துடன் காத்திருந்தவர்கள் இன்று உயிருடன் வந்திருக்கன்றார்கள்.

முன்னாள் போராளிகள் உயிரிழந்திருநதால் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள் எனவும் அவர்களின் மருததுவ அறிக்கைகளை ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் முன்னாள் போராளிகளுக்கு அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts