வைத்தியர் மீது தாக்குதல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் கணவரும் உறவினர் ஒருவரும் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் மன்னார் பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலை கண்டித்து காலை 8 மணிமுதல் வைத்தியர்கள் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் வைத்தியசாலைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இன்று காலை மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர், உதவி பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts