வைத்தியர் இல்லாமையினால் நடந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும்!!!

அண்மையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையினால் நடந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக வடமாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமென்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா கருத்துவெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் கூறுகையில்,

“வடமாகாணத்தில் வைத்தியர்களையும் வைத்திய நிபுணர்களையும் நியமிப்பதற்கு மத்திய அரசுடன் போராட்டத்தினை நடாத்தி வருகின்றோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை தீவுப் பகுதியில் உள்ள வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதென்பது பெரும் சிரமமாக இருக்கின்றது. தீவுப் பகுதிக்கான வைத்தியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அனுப்பும் போது, தீவுப் பகுதிக்கான வைத்தியர்களுக்கான விண்ணப்பங்கள் அதிகளவு கிடைப்பதில்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களினால் செய்ய முடியாததை, அதே மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பொருந்தும் என்பதே உண்மை. நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் என சொல்லிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றஉறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கும் கணிசமான பங்களிப்பு இருக்கின்றதென்பதனை மறந்துவிட முடியாது.

இங்கு காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளனர் என எம்மைக் குறை கூறுவதை விடுத்து அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசிடம் இது சம்பந்தமாக எதை கூறினீர்கள் என்று மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்பதனை சிந்தித்து நாங்கள் செய்யும் சேவைகளுக்கு பங்களிப்புச் செய்வதே பிரதி உபகாரமே தவிர, இவ்வாறான துன்பகரமான செய்திகளை வைத்து பத்திரிகைகளில் அறிக்கை விடுவது, மக்களை ஒரு போதும் உங்களுடன் இணைக்காது. மருத்துவம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மாணவியின் விபத்துச் சம்பவத்தின் போது, புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமைக்கான காரணம் தொடர்பான விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சரினால் வைத்தியரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts