வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!! நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாத நிலை!!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லையென தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள், பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பதிலளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, அவசர சிகிச்சை மற்றும் விபத்துக்கள் பிரிவு, சிறுநீரக நோயாளர் பிரிவு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏனைய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஆதரிப்பதால், இலங்கை மருத்துவ சபையின் சுயாதீனம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து ஏற்கனவே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts