வைத்தியரை மோதிய சாரதிக்கு விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான தனியார் பேருந்தின் சாரதியை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

கடந்த திங்கட் கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா செந்துருவன் (வயது-37) என்ற வைத்தியர் தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த இரு பேருந்துகள் ஒன்றினை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது எரிபொருள் நிரப்பிவிட்டு பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட வைத்தியரின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் சரணடைந்தார். தொடர்ந்து அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts