வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

கடந்த பத்தாம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஆசிரியையான தனது மனைவியை பிரசவத்திற்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அன்றைய தினமே மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பத்தாம் திகதி இரவு வரை வயிற்று வலி காணப்பட்டதாகவும், இதனை மனைவி கடமையில் இருந்த தாதியர்களிடம் இதனை பல தடவைகள் கூறியபோதும் அவர்கள் அதனை பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்றும் தெரிவித்த கணவன்.

நள்ளிரவு பதினொரு மணிக்கு தனது மனவைியை சுக பிரசவத்திற்காக அறையில் கொண்டு சென்று விட்டதாகவும் ஆனாலும் பிரசவும் இடம்பெறவில்லை என்றும் மறுநாள் 11 ஆம் திகதி மனைவியை பரிசோதித்த போது குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து சென்றமை கண்டறியப்பட்டு உடனடியாக சத்திர சிகிசை மூலம் காலை எட்டு முப்பது மணியளவில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட போது இறந்தே காணப்பட்டது என்றும் தெரிவித்த அவர்

ஆசியர்களாக கடமையாற்றும் நாம் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டோம் இந்த நிலையில் எமது முதல் குழந்தைக்காக நாம் மிகவும் ஆசையாகவும் எதிர்பார்ப்போடும் காத்திருந்தோம் ஆனால் உயிரற்ற அழகான பெண் குழந்தையினையே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை எம்மிடம் கையளித்தது.

மாதாந்த கிளினிக் மற்றும் வைத்திய பரிசோதனைகளின் போது ஆரோக்கியமாக இருந்த குழந்தை எப்படி இறந்தது? போதுமான நிறையுடன் இருந்த குழந்தை எப்படி இறந்தது? எனக் கேள்வி எழுப்பிய அவர் மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த போக்கே இதற்கு முழுக் காரணம். இதற்கு எமக்கு நீதி வேண்டும் என அழுதவாறே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும் என்ன நடந்தது என்று ஆராய வேண்டும் என்றும் தெரிவித்த அவர்கள் விடயத்தை ஆராய்ந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

Related Posts