ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் , ”வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. நாம் இலங்கையர்கள் என்ற பொழுதில் நாம் புறக்கணிக்கப்படமட்டோம் அரசாங்கத்தால் முதற்கட்டமாக வழங்கப்படும் இவ் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ், கிளிநொச்சி இளைஞர் யுவதிகளுக்கு இன்றைய தினம் இவ் வேலைவாய்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் காலங்களிலும் இவ் மீதி வேலை வாய்ப்புக்கள் வழங்கி வைக்கப்படும்.
நான் தேர்தலில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி வாக்குக்களை பெற்றேன் என அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர் நான் அப்படி கூறவில்லை. வேலைவாய்ப்பு எமது இளைஞர் யுவதிகளுக்கு பெற்று தருவதற்கு கடினமாக உழைப்பேன் என்றேன் வாக்குறுதி அளித்தேன் . அதன் படி எனது தேர்தல் வாக்குறுதிகளின் படி “என் கனவு யாழ்” செயற்திட்டம் ஆரம்பமாகிறது.