பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் வேலை வழங்காவிடின் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.குஷையின் முபாரக் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது. அதிலும் குறிப்பாக நாட்டில் ஐம்பதனாயிரம் பட்டதாரிகள் மாத்திரமே சராசரியாக உள்ள நிலையில் 10 இலட்சம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கப்போவதாக கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தொழிற்சங்கத்தின் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் ஆகியோர் குறிப்பிடுகையில்,
தாங்கள் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியினை மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே கற்று பட்டம் பெற்றோம்.
தற்போது எந்தவிதமான அரச தொழிலும் இன்றி வயதெல்லை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் நல்லாட்சி அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுவது கவலை அளிக்கின்றது.
இதற்கு முன்னரும் பலமுறை நாங்கள் எங்களது பட்டதாரிகளின் நிலை தொடர்பாக எடுத்துக்கூறியபோது அதனை கருத்தில் எடுத்து செயற்பட்டார்கள். ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எங்களது எந்தக்கோரிக்கையினையும் ஏற்காது அசமந்தப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றது
மேலும், பட்டதாரிகளின் வயதெல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதனால் எதிர்காலத்தில் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகும் என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதென கவலை தெரிவித்துள்ளனர்.