வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் – அமைச்சரவை அனுமதி

தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது, அதனை செவிமடுத்த ஜனாதிபதி, அனைவருக்கும் தொழில்வாய்ப்பு கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.

அத்துடன் மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் தொழில்வாய்ப்பு இன்றி காணப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அமைய 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு பெற்றவர்களின் பெயர் விபரங்கள் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

இதனையடுத்து, தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத ஏனைய பட்டதாரிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts