வேற்றுமை பாராட்டினால், ஊரின் ஒற்றுமை சீர்குலையும் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் நேற்று (03) மாலை நடைபெற்றது. இதன்போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“விளையாட்டுப் போட்டிகள், அதில் பங்குபற்றுபவர்களின் சோர்வைப் போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துவது மட்டுமன்றி, பார்வையாளர்களாக வீற்றிருக்கின்றவர்களுக்கும் ஓர் உற்சாகத்தையும் உடல் வலுவையும் உணர்ந்து கொள்ளக் கூடியவாறு அமைகின்றன. பலவிதமான உத்தியோகபூர்வக் கடமைகளுக்குள் அமிழ்ந்து கிடக்கும் எமக்கு, இது ஒரு வரப்பிரசாதம். மன இறுக்கத்தை இவ்வாறான நிகழ்ச்சிகள் நெகிழச் செய்கின்றன.

“விளையாட்டு நிகழ்வுகள், இன்று, நேற்று ஆரம்பமானவையல்ல. சந்ததி சந்ததியாக மரபு வழியாக பல விளையாட்டுகள் தமிழர்களின் வாழ்வுடன் இணைந்தனவாக விருத்தி அடைந்து வந்துள்ளன. எனினும், தமிழர்களுக்கே உரிய பல பாரம்பரிய விளையாட்டுகள் காலப்போக்கில் கைவிடப்பட்டு, மேலைத்தேய முறையிலான விளையாட்டுப் போட்டிகள் பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“இதனால் பண்டைய விளையாட்டுகளான கோலாட்டம், சிலம்பாட்டம் உறியடித்தல், கிறீஸ் கம்பம் ஏறுதல், தலையணைச் சண்டை, கிடுகு பின்னுதல், தேங்காய் உரித்தல், கிளித்தட்டு, கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுகள், எம்மிடையே மருவி, கிட்டிப்புள்ளு கிரிக்கெட் ஆகவும் கோலாட்டம், சிலம்பாட்டம் பிறேக் டான்ஸ் ஆகவும் மாறிவிட்டன என்று கூறலாம்.

“வருடத்தில் ஒருமுறை, ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்றுகூடி முன்னெடுக்கும் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பங்குபற்றுவதும், ஊரின் ஒற்றுமையை வலியுறுத்தும். சாதி, மத வித்தியாசங்கள் இன்றி இந்நிகழ்வுகள் நடைபெற வழிவகுக்க வேண்டும். வேற்றுமை பாராட்டினால், ஊரின் ஒற்றுமை சீர்குலையும்.

“எது எவ்வாறெனினும் எமது பண்டைய கலாசாரங்கள், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் ஆகியன அழிந்து போகாது பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது எமது கடமையாகும். அதற்காக எமது இளைஞர், யுவதிகள், அவற்றின் மீது நாட்டம் கொள்ளக்கூடிய வகையில் காலத்துக்கேற்ப சிறிய மருவல்களை உள்ளடக்கி, அடிப்படைக் கருத்துகளுக்கு மாற்றங்கள் செய்யாது, அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது.

“எமது பாரம்பரியங்கள் அழிந்துவிட்டால், எமது தனித்துவம் அழிந்துவிடும். ஜனநாயகம் என்பது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ஒற்றுமையாக முன்னேறுவதையே குறிக்கும். ஆகவே, உங்கள் தனித்துவத்தைப் பேண முயற்சி செய்யுங்கள்” என்றார்.

மேலும், “ஒற்றுமை என்பது பலம். ஒரு சக்தி. ஏதோ ஒரு காரணத்தால், எமது தமிழ்ச் சமுதாயத்தில், ஒற்றுமைக்கு நாம் முதலிடம் கொடுப்பதில்லை. அதற்கு எமது ஆணவமும் ஒரு காரணமாக இருக்கலாம். அகம்பாவம் எம்மிடையே புரையோடி இருக்கும் வரையில், ஒற்றுமை சாத்தியப்படாது. ஒற்றுமைக்கான அடித்தளம், எமது உள்ளத்திலேயே ஊற்றெடுக்க வேண்டும். மற்றவனை மதிக்கும் தன்மை இருந்தால், ஒற்றுமை தானாக வளரும்” என்று ​தெரிவித்தார்.

Related Posts