வேறு மாகாணத்தினர் வடக்கில் குடியேற முடியாது – முதலமைச்சர் சி.வி

வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

wigneswaran__vick

வடமாகாண சபையின் காணி தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

அரச காணிகள், தனியார் காணிகள் என இரண்டு வகைக் காணிகள் உள்ளன. 1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயர், காணிகளை அரச வேலைகளுக்கான பிடித்து வைத்தனர். அந்நிலைமை ஒல்லாந்தர் காலத்தில் பதிவிடப்பட்டு பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் ஒரு நிர்வாக பிரிவின் கீழ் காணிகள் பதிவு செய்யப்பட்டன. காலபோக்கில் அவை அரச காணிகள் என்று மாற்றம் பெற்றன.

1 ½ வருடங்களுக்கு முன்னர் கொடுக்கப்படவேண்டிய காணி உறுதிகளையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து வழங்கவுள்ளார்.

அதாவது, வடக்கு மக்களுக்கு காணிகள் வழங்குகின்றோம் என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவே இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்கின்றார்.

ஆனால் அவை அனைத்தும் புதிதாக வழங்கப்பட்ட காணிகளின் உறுதிகள் அல்ல. அவற்றில் பெரும்பாலானவை காணி உறுதிகள் தொலைந்த அழிவடைந்த காணி உறுதிகள் ஆகும்.

மாகாவலி அபிவிருத்தித்திட்டம் என்ற ரீதியில் வடக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. எமது வடமாகாண சபை அனுமதி பெற்றே காணிகளை சுவீகரிக்க முடியும். அந்தவகையில் கடந்த காலங்களிற்கு 25 தொடக்கம் 30 விண்ணப்பங்கள் இராணுவத்தினரிடம் இருந்து எனக்கு வந்தன.

அவற்றில், இராணுவ முகாம் அமைப்பதற்கு காணிகள் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தும் பொதுத்தேவைகளுக்கு மட்டும் காணிகள் வழங்க முடியும் எனக்கூறி அந்த விண்ணப்பங்களை நிராகரித்தேன்.

அதன்பிறகு எனக்கு எவ்வித விண்ணப்பங்களும் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்த போது, விண்ணப்பங்கள் காணி ஆணையாளரிடம் செல்வதாக அறிந்தேன். காணி கையேற்கை சட்டத்திலேயே பொதுத்தேவைக்கு மாத்திரம் காணிகள் அபகரிக்க முடியும் எனக்கூறப்படுகின்றது.

அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வவுனியாவில் இடம்பெறும் காணி கையேற்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளரிடம் விளக்கம் கேட்டேன்.

அவர் தாம் பொதுத்தேவை கருதி இராணுவத்திற்கு காணிகளை வழங்கி வருவதாக கூறினார். நான் கேட்டேன் இராணுவத்திற்கு வழங்குவது எவ்வாறு பொதுத்தேவையாகும் எனக்கேட்டேன்.

அதற்கு அவர், மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டுள்ளனர். ஆகையால் காணிகளை வழங்குகின்றோம் எனக் கூறினார்.

மக்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் இல்லை. இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவதற்காகவே வடமாகாண தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.

அக்கோரிக்கையையே நாங்கள் மக்களிடம் முன்வைத்து தேர்தலில் வென்றோம் என அவருக்கு விளக்கம் கொடுத்தேன்.

வடக்கிலிருந்து வெளியேறி புத்தளம் பகுதியில் தங்கியுள்ள முஸ்லிம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களும் வடமாகாண சபைக்கு உட்பட்டதாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

புத்தளத்தில் குடியேறி காணிகளை வைத்திருக்கும் ஒருவர், வடக்கில் குடியேறுவதற்கும் காணிகள் வேண்டும் எனக்கேட்கின்றார். அது எந்தவிதத்தில் நியாயம் என மேலும் முதலமைச்சர் வினவினார்.

அதற்கு பதிலளித்த வடமாகாண சபை உறுப்பினர் ஆயூப் அஸ்மின், ஒரு சிலரே அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதாவது, தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவிர அனைத்து முஸ்லிம்களும் அவ்வாறானதொரு செயலில் ஈடுபடவில்லை என கூறினார். அவ்வாறு ஈடுபடுபவர்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்டி அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts