சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.
வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தவிர பொலிஸ் அவசர இலக்கத்திற்கோ பொலிஸ் தலைமையக தொலைபேசி இலக்கத்துக்கோ அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வீடு வீடாகச் சென்று வாக்கு கோருவது, வாக்காளர்களுக்கு பரிசில்கள் வழங்குவது, வாக்கு கேட்பது, ஊர்வலங்கள் செல்வது, கட்-அவுட் போஸ்டர்களை காட்சிப் படுத்துவது, அச்சுறுத்துவது, ஏசுவது என்பன தவறாக கணிக்கப்படுகிறது.
இதன்படி முதற் தடவையாக இவ்வாறான தவறுகள் குறித்து பொலிஸாருக்கு முறையிடுவதற்காக இரு விசேட மின்னஞ்சல்களை அறிமுகப் படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்.ஜே. இளங்ககோன் பணிப்புரை வழங்கியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்த திகதி முதல் ஒரு வாரம் வரை ஊர்வலங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மத மற்றும் வேறு ஊர்வலங்கள், பெரகராக்களுக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தை மீறும் செயற் பாடுகள் குறித்து பொலிஸ் அவசர பிரிவின் 119 இலக்கத்திற்கோ பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக 011- 2395605, 011-2384024 இலக்கத்திற்கோ பொலிஸ் தலைமையக 011- 2543811 அல்லது 011-2387999 இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்கள் கோரப் பட்டுள்ளனர்.
இது தவிர சட்ட விரோத தேர்தல் நடவடிக்கைகள் பற்றி வீடியோ செய்து அவற்றை Policemedia. Media@ gmail.com அல்லது teligf@ Poliu.lk எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கோ அனுப்புமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுள்ளார்.
இதனடிப்படையில் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். வீடியோக்களில் பதிவானோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.