தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும் நகரசபையின் 5 ஆம் வட்டாரத்தில் இராமச்சந்திரன் ஆகிய இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே மேற்படி தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,’குறித்த வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்றிரவு பிரசாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வண்டி ஆகிய வாகனங்களில் வந்தவர்கள் அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட மூவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும் துரத்தியதாகவும் இதனால் அனைவரும் வேறு வேறு திசைகள் நோக்கி ஓடிச் சென்றதாகவும் வேட்பாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அச்சம் காரணமாக தான் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்ததாகவும் இன்று காலை சாவகச்சேரி பொலிஸார் வந்து தன்னை மீட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் தாம் பதிவு செய்துள்ளதாக குமாரவேல் மேலும் குறிப்பிட்டார்.