வேகத்தை குறையுங்கள் , இல்லையேல் சட்டநடவடிக்கை

யாழ். மாவட்டத்திலுள்ள வீதிகளில் டிப்பர் ரக வாகனம், ஏனைய வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்றால் எதிர்காலத்தில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்தசில்வா தெரிவித்தார்.

போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்பெற்றது. அதன்போதே போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இடம்பெற்றுவந்த யுத்தம் முடிவடைந்து அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வீதிகள் புனரமைக்கப்பட்டு “காப்பெற்” வீதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் அதிக வேகத்துடன் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர். இதனால் அதிகரித்த விபத்துக்கள் ஏற்படுகின்றது. நாமும் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எனினும் பயணிப்போர் அவற்றை கடைப்பிடிப்பதாக தெரிவியவில்லை. இவற்றுக்கும் மேலாக இன்று டிப்பர் ரக வாகனத்தின் பாவனை அதிகரித்துள்ளது. அவை அதிக வேகத்துடனேயே செல்கின்றன. இதனால் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகின்றது.

அதுமட்டுமல்ல வீதியில் டிப்பர் ரக வாகனங்களை கண்டால் கூட பயணிப்பவர்கள் வீதியின் ஓரமாகச் செல்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எனவே சாரதிகள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். பயணிப்போரின் நலனைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் காலத்தில் அதிக வேகத்தில் செல்லும் ஏனைய வாகனங்கள் மற்றும் டிப்பர் ரக வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts