வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் உதவி

தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரட்டி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ஏற்கனவே ரூ.25 லட்சம் காசோலை வழங்கினார்கள். நடிகர் விஷால் ரூ.10 லட்சமும் நடிகர் தனுஷ் ரூ.5 லட்சமும் வழங்கினார்கள்.

நேற்று நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் சார்பில் ரூ.5 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.5 லட்சம் உதவி வழங்கினார். இதுபோல், நடிகர்கள் சத்யராஜ்-சிபிராஜ் சார்பில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுவரை ரூ.52 லட்சத்து 25 ஆயிரம் வசூலாகியிருக்கிறது.

நடிகர்-நடிகைகளிடம் முதல்-அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் நிதி திரட்ட நடிகர் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வீடு, வீடாகச் சென்று இந்த நிதி திரட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித்குமார் உள்பட முன்னணி கதாநாயகர்கள் அனைவரிடமும் வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts