வெள்ளை வான் கடத்தலானது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என, ஒன்றிணைந்த எதிரணியின் நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிரணியினரின் ஏற்பாட்டில், கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி காரணமாக ஏற்பட்ட நட்டத்தின் முழுத் தொகை தொடர்பில், நிதிச்சபை அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
அத்துடன், கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் என்பது உண்மையான சம்பவமல்ல என்றும், புலம்பெயர் அமைப்பு மற்றும் சனல் 4 என்பவற்றினால் சித்தரிக்கப்பட்ட விடயமே அதுவென்றும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஊழல்களுக்கான சகல ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பந்துல எம்.பி குறிப்பிட்டார்.
தற்போதுள்ள அரசாங்கமானது, சில வாகனங்களை மாத்திரம் கண்டுபிடித்து வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான சிறிய ஊழல்களுக்காக சிரமப்படும் அரசாங்கம், மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஊழலுக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது தவறான விடயம் என, அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.