வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞன் பொலிஸாரால் கைது

meeting_jaffna_police_jeffreeyயாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸார் கைதுசெய்தாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த கந்தையா ஜேசுதாசன் (வயது 28) என்ற நபரை கடந்த 17ஆம் திகதி மாலை சண்டிலிப்பாய் சங்குவேலி பகுதியில் வைத்து வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்டு, கடத்தப்பட்டவரின் மனைவி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார்.

அம்முறைப்பாட்டின் பிரகாரம், மானிப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட வேளை, கடந்த 16ஆம் திகதியளவில் 12.15 மணியளவில் அல்வாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 6 இலட்சத்தி 85 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கையடக்கத் தொலைபேசி என்பவற்றினை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர் மேற்படி வீட்டில் பெயின்ற் வேலை செய்துள்ளார். கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அம்முறைப்பாட்டின் பிரகாரம் நெல்லியடி பொலிஸார் வெள்ளை வானில் வந்து கைதுசெய்த நபரின் மனைவியிடம் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளாக கூறிச் சென்றுள்ளனர்.

ஆனால், மனைவி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாரோ கணவனை கடத்தி சென்றதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

பொய்யாக முறைப்பாடு பதிவு செய்த குறித்த நபரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

யாழில் இளைஞர் கடத்தப்பட்டார்

Related Posts