”சித்திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்போம்” என வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர்.
வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில்இ யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களே மேற்கண்டவாறு தெரி வித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்புச் செய்ய வேண்டாம், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் நலன்புரி நிலைய மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 மாதத்திற்குள் வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்து. வலிவடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தருவேன் என கூறினார்.
ஆனால், பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக புனரமைப்புச் செய்வதற்கு வலிவடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமென்றும், அதை யார் எதிர்த்தாலும், பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புச் செய்யப்படுமென்று பாதுகாப்பு செயலாளர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் கருத்துக்கள் எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மாத காலத்திற்குள் எம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வார் என நாம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், பலாலி விமான நிலையத்தினை விஸ்தரிப்புச் செய்வோம் என கூறியதன் பின்னர் ஜனாதிபதியின் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.
அத்தியாவசிய பிரச்சினைகளான மலசல கூடங்களை பாவிப்பதில் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உட்பட இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதில் பிரச்சினை, சமூக கலாசார பிரச்சினைகளை எதிர்நோக்கும் எம்மை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். எமது சொந்த இடத்திற்கு சென்று தாங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம்.
உங்கள் பிள்ளைகளை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் மந்தபோக்கே எமது மீள்குடியேற்ற தாமதத்திற்கு காரணமகும்.
எனவே, சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் எம்மை ஜனாதிபதி கருணை கொண்டு, எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுவருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யத் தவறின் எம்மை அழித்தாலும் பரவாயில்லை வெள்ளைக் கொடியினை பிடித்துக்கொண்டுஇ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து எமது சொந்த இடங்களில் நாமே மீள்குடியேறுவோம்.
1990 ஆம் ஆண்டு சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொல்லென்னாத் துன்ப துயரங்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். எம்மைத் தேடிவரும் பலரும் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அத்துடன் நல்லிணக்க அரசாங்கத்தினாலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் எதுவும் நடக்கவில்லை. இன்றுவரை நாம் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றோம்.
ஏப்ரல் மாதத்திற்கு முன் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இல்லையேல் எமது குடும்ப அட்டைகளை பிரசேத செயலங்களில் ஒப்படைத்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி எமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என்றனர்.
இதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 32 நலன்புரி நிலைய மக்கள் கலந்து கொண்டதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன்இ வடக்குமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன்இ வலி.வடக்கு பிரதேச முன்னாள் உபதவிசாளர் ச.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தம்மை மீள்குடியேற்றம் செய்யும் வரை வலி.வடக்கு மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை சுழற்சி முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.