வெள்ளைக்கொடியுடன் சென்று குடியேறுவோம்

எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எமது நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களில் நாங்கள் 16 வீடுகள் மாறியுள்ளோம். மீள்குடியேற்றக்கோரி கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்களை நடத்தி வருகின்றோம். எங்களால் தெல்லிப்பழை துர்க்கையம்மன ஆலயத்தில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

போர் நடவடிக்கைக்காக தான் காணிகளை இராணுவ கையகப்படுத்தி வைத்துள்ளனர். போர் முடிந்துவிட்டது தானே இனி அந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்போது அவர் கூறியிருந்தார். தற்போது அவர் பிரதமராக இருக்கின்றார். எமது காணிகளை விடுவிக்க அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் போராட்டத்தில் கலந்துகொண்டு சென்ற சில நிமிடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்மீது சிலர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அவர்களில் ஒருவரை நாம் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து இருந்தோம். ஆனால், அந்த நபருக்கு எதிராக எந்தநடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையாக மக்கள் அனைவரும் இன்றும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றோம். நாம் தான் இந்த நாட்டிலே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.

தமிழ் மக்கள் வாக்களித்தமையால் தான் ஜனாதிபதி ஆகியதாகவும், அதனை மறக்கமாட்டேன் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வருகின்றார். தனியே மறக்கமாட்டேன் என கூறுவதால் எந்த பயனுமில்லை. காணிகளை விடுவித்து, அவரை தமிழ் மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காது இருக்கச் செய்ய வேண்டும்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் எமது முகாமுக்கு வந்து விரைவில் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவீர்கள் எனக்கூறி சென்றார். அது இன்னும் நடைபெறவில்லை.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராணுவம் தான் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு கூறி தனது முகத்திலும் நல்லாட்சி என சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் முகத்திலும் கரியை பூசியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளார். அவர் இந்த அரசாங்கத்துடன் பேசி எங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பாரா அல்லது அவரும் இராணுவத்தை சாட்டிக்கொண்டு இருக்க போகின்றாரா?.

எமது குடும்ப அட்டைகளை மீளாய்வு செய்ய போகின்றோம் எனக்கூறி கிராமஅலுவலர் ஊடாக பிரதேச செயலகங்கள் பெற்று ‘இ’ (இடம்பெயர்ந்தோர்) அட்டைகளை அனைத்தும் ‘அ’ (வருமானம் குறைந்தவர்கள்) அட்டைகளாக மாற்றி தந்து, எமக்கான இடம்பெயர்ந்தோர் நிவாரணத்தை வெட்டிவிட்டார்கள்.

எதற்காக எமது நிவாரணத்தை வெட்டினீர்கள் என கேட்டால் நீங்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டீர்கள் எனக் கூறினார்கள். அப்படியென்றால் இந்த முகாம்களில் வசிக்கும் மக்கள் நாங்கள் யார்? என நாங்கள் திருப்பி கேட்டால் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்

எம்மை விரைவில் எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும். இல்லை ஏனெனில், எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு கையில் காணி உறுதி மறுகையில் வெள்ளை கொடியுடன் உயர்பாதுகாப்பு வலயம் என அடைக்கப்பட்டுள்ள முள்வேலிகளை தாண்டி நாங்கள் சென்று எமது காணிகளில் குடியேறுவோம் என தெரிவித்தார்.

Related Posts