வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்!!

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழைவெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்வதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்துவருகின்றது. இதனால் நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தினை மூடியதுடன் நீர் பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்றது. பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் வீதி எது? என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்பக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. ஆகவே, வட்டுவாகல் பாலத்தின் இரு கரையிலும் பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரையையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக கூறப்படும் வட்டுவாகல் பாலம் கிட்டதட்ட 440 மீற்றர் நீளம் கொண்டதாக காணப்படுகின்றது. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் அமைந்துள்ளது.

வட்டுவாகல் பாலம் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம், 2004ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது. இருந்தும் சிறு சிறு திருத்தங்கள் இடம்பெற்று இன்றுவரை பாவனையில் இருப்பது குறிப்பிடதக்கது.

Related Posts