வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் பிரதான வீதியில், கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள பாலம் நிர்மாணிக்கப்படாமையால், வெள்ள நீர் நிரம்பி பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் குறித்த வீதி, மழைக் காலங்களில் வீதி எங்குள்ளது, பள்ளங்கள் எங்குள்ளன என்பது தெரியாத அளவிற்கு காட்சியளிக்கின்றது. அண்மைய நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக குறித்த வீதியின் ஊடாக வெள்ள நீர் கடந்து செல்கின்றது. இதனால் இன்றைய தினம் மூன்றாம் தவணை பரீட்சைக்காக சென்ற மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர்.

தமது பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள், குறித்த பாலத்தை சீரமைத்து வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு வழிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்விக்காக பல கொள்கைகளை உருவாக்கும் அரசாங்கமும், கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண கல்வி அமைச்சரும் மாணவர்கள் எதிர்நோக்கும் இப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்கப் போகின்றார்கள் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கிளிநொச்சியில் தொடர்ந்து இவ்வாறு மழை பெற்றும் சந்தர்ப்பத்தில், ஏற்கனவே நீர் பெருகியுள்ள பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்குமென மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts